என் சக தோழிகளுக்கு ஒரு கடிதம்…

'ஆணின் நிழலில் தான் பெண் வாழ வேண்டும்' என்பதில் இருந்து மீள வேண்டும், என்று சக தோழிகளுக்கு எழுதுகிறார் எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.

‘ஆண்களின் நிழலில் தான் பெண்கள் வாழ வேண்டும்’ என்பதில் இருந்து மீள வேண்டும், என்று நமக்கு, சக தோழிகளுக்கு எழுதுகிறார், எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.

விமன்ஸ் வெப் இணைய தோழிகளுக்கு உங்கள் தோழி எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதும் கட்டுரை/கடிதம்.

நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் நாம் பெண்ணுரிமை மற்றும் பெண்ணியம் பற்றிப் பேசி வருகிறோம். நமக்கு முன்னால் வாழ்ந்த பல சமூக சீர்திருத்தவாதிகளும், பெண்ணியச் சிந்தனை உடையவர்களும் பெண்களின் நலனுக்காக சம உரிமைக்காக எவ்வளவோ பாடு பட்டார்கள். அதன் பலன் நாம் இப்போது ஓரளவு முன்னேறி விட்டோம் என்று சொல்லலாம். அதுவும் ஓரளவு தான்.

பெண்ணை அளவிடும் கருவி?

பெண்களை வெறும் உடலாகப் பார்க்கும் கண்ணோட்டம் இன்னமும் இலை மறை காயாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. தன்னை மிகவும் முன்னேறியவன், பெண்ணியச் சிந்தனை உள்ளவன் எனச் சொல்லிக்கொள்ளும் ஆண்கள் பலரும் கூட இன்னமும் அணியும் உடையை வைத்து, மற்றவர்களோடு பழகும் விதத்தை வைத்து, பெண்ணின் ஒழுக்கத்தை முடிவு செய்கிறார்கள்.

ஒரு பெண்ணின் ஆடை, அலங்காரம் இவை தான் ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை அளவிடும் கருவியா? அவளது அறிவு, திறமை ஆகியவை ஏன் மதிக்கப்படவில்லை?

இந்த விஷயத்தில் பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கிறார்களோ? என்ற அச்சம் எழுகிறது. ஒரு அலுவலகத்தில் பணி செய்யும் பெண்களில் ஒருத்திக்கு ஊதிய உயர்வு/பதவி உயர்வு கிடைத்தால், அந்தப் பெண் தனது அழகை பங்கிட்ட பிறகே அதனை அடைந்திருக்கிறாள் என முதலில் பேசுவது ஒரு பெண்ணாகவே இருக்கிறாள்.

இதில் அப்பெண்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை எனத் தோன்றுகிறது. காலம் காலமாக பெண்கள் மனதில் விதைக்கப்பட்ட ஆணாதிக்கமே இப்படிப் பேச வைக்கிறது, அவர்களை.

ஆணாதிக்கத்தினால் விளைந்த இந்த குணத்தை தான் ஆண்கள் நமக்கெதிரான குற்றச்சாட்டாக முன் வைக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிராக பெண்களைத் தூண்டி விட்டு…

பெண்களுக்கு எதிராக பெண்களைத் தூண்டி விட்டு குளிர் காய விரும்பும் ஆண்கள் இன்னமும் நிறைய பேர் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குடும்பத்தை எடுத்துக்கொண்டால் மாமியார் மருமகள் சண்டையை முன் வைத்து, இரு பெண்களால் ஒற்றுமையாக வாழவே முடியாது என்ற வாதத்தைக் கூறுகிறார்கள். ஆனால் இதன் பின்னால் இருக்கும் பாரம்பரிய மனநிலை, அடிமை மனப்பான்மை இவற்றை சொல்ல மறந்து விடுகிறார்கள்.

நமது இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை, பல நூற்றாண்டுகளாக பெண்களுக்கு சொத்துரிமையோ, வேலை செய்து பணம் ஈட்டும் உரிமையோ இல்லாதிருந்தது. அவள் குடும்பத்தில் இருக்கும் ஆண்மகனைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டாள்.

பகடையாகும் பெண்கள்

முதலில் தகப்பன், பிறகு கணவன், இறுதியாக மகன் என ஆண்களின் நிழலில் மட்டுமே வாழும் அவலம் பெண்ணுக்கு இருந்தது. இந்த ஆரோக்கியமற்ற சூழல் காரணமாக தனது ஆளுமையை நிரூபித்தல் ஒரு பெண்ணுக்கு கட்டாயமானது.

மகன் மேலான ஆளுமையும், கணவன் மீதான ஆளுமையும் சந்திக்கும் போது தான் பிரச்சனைகள் மாமியார் மருமகள் சண்டைகளாக வெடிக்கின்றன.

காலம் காலமாக மாமியார் மருமகள் சண்டையைக் கண்டும் அனுபவித்தும் வரும் ஆணினம், அதை ஏன் தீர்க்க முயற்சி செய்யவில்லை? இருவரையும் அடித்துக்கொள்ள விட்டு விட்டு ஏன் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது?

இதனால் அவர்களுக்கு லாபமே அன்றி நஷ்டமல்ல. கடும் குளிர் காலத்தில் நெருப்பில் காயும் சுகம் கிடைக்கும் போது அவர்கள் அதனை விடுவார்களா என்ன?

இதற்கான தீர்வு?

அப்படியானால் இதற்கெல்லாம் தீர்வு என்ன? முடிவு என்ன?

பெண்களின் தெளிவான சிந்தனையே இதற்கான தீர்வு. சக பெண்கள் மீது மரியாதையும், மதிப்பும் வைத்து விஷயங்களைப் பார்த்தோமானால் தெளிவான பார்வை கிடைக்கும்.

இத்தனை ஆண்டுகளால ஆண்களின் கண்ணோட்டத்திலேயே நாம் மற்ற பெண்களைப் பார்த்து விட்டோம். இனியாவது பெண்களின் கண்ணோட்டத்தில் உலகத்தைப் பார்ப்போம். உடுக்கும் உடையிலும், பழகும் தன்மையிலும் கற்பு இல்லை.

திமிர்ந்த ஞானச் செருக்கே கற்பு. நாம் அதை ஆண்களுக்காகப் பேணவில்லை. நமது சுய கௌரவம், சுய மரியாதை இவற்றுக்காகப் பேணுகிறோம். சமையல் செய்வதும் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதும் நமது மரபணுக்களிலேயே இருக்கிறது. ஆனால் அதற்காக மட்டுமே பெண்கள் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும்.

சம உரிமையும் கடமையும் ஆண்களுக்கும் உண்டு

அலுவலகம் சென்று திரும்பி வந்தாலும் பெண் தான் சமைக்க வேண்டும், குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத சட்டங்களை நாம் உடைத்தெறிய வேண்டும்.

வீட்டு வேலைகளிலும், குழந்தை பராமரிப்பிலும் சம உரிமையும் கடமையும் ஆண்களுக்கும் உண்டு. நமது உரிமைக்காக நாம் ஆண்களிடம் கையேந்தி நிற்கத் தேவையில்லை.

உரிமை என்பது எடுத்துக்கொள்ளப்படுவது. கேட்டு பெறப்படுவது அல்ல. ஆகையால் குடும்பத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் நம் உரிமையை நிலை நாட்டுவோம்.

அனைத்துப் பெண்களையும் மதிப்போம். அப்போது தான் நம் மீது திணிக்கப்படும் ஆணாதிக்கத்தை நம்மால் வெல்ல முடியும்.

இனி அடுத்த கடிதத்தில் உங்களை சந்திக்கும் வரை,
ஸ்ரீஜா வெங்கடேஷ்.

 

About the Author

4 Posts | 8,923 Views
All Categories