Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
யாரையும் புண்படுத்தாமல், 'பாடி ஷேமிங்' விரசமின்றி, மனதை கஷ்டப்படுத்தாமல் சிரிக்க வைப்பது தான் மிகச் சிறந்த நகைச்சுவை ஆகும்!
நகைச்சுவை என்பது சிரிப்பதற்கு மட்டும் இல்லை, சிந்திக்க வைப்பதற்கும்! ‘பாடி ஷேமிங்’ விரசமின்றி, மனதை கஷ்டப்படுத்தாமல் சிரிக்க வைப்பது தான் மிகச் சிறந்த நகைச்சுவை ஆகும்!
இன்று வரை நகைச்சுவை என்றால் பலரின் மனதில் நிற்கும் ஒரு முகம், சார்லி சாப்ளின்! விரசமின்றி, யாரையும் அவமானப் படுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜீனியஸ் அவர்.நகைச்சுவைக்கென ஒரு இலக்கணம் வகுத்தவர்.
நகைச்சுவையால் மனதில் மகிழ்ச்சியும் முகத்தில் நகைப்பும் தோன்ற வேண்டும், மனம் மகிழாமல் முகத்தில் தோன்றும் நகைப்பு சுவையாகாது. நடைமுறையில் இதனை, ‘பச்சைச் சிரிப்பு’ என்கிறார்கள்.
என்ன தான் நாம் முன்னேறிய, நவீனமான சமுதாயத்தில் இருப்பதாக சொல்லிக்கொண்டாலும், இன்றளவும் நம்மிடையே, மற்றவர்களின் உடலை பற்றிய கேலியும், நையாண்டி பேச்சுக்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சில சமயங்களில் அதையும் நாம் ரசித்து கொண்டு தான் இருக்கிறோம்.
சினிமா என்ற குறிப்பிடத்தக்க துறையில் உடல் அமைப்பை வைத்து நக்கலாக பேசியும், பாட்டு எழுதியும் வருவதுடன் (“கத்தரிக்காய், கத்தரிக்காய் குண்டு கத்திரிக்காய்…”,”குண்டு குண்டு குண்டு பெண்ணே,கூப்பிடுது ரெண்டு கண்ணே”), பல வசனங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது, ‘பாடி ஷேமிங்’.
திரையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தங்களுடைய உடல் அமைப்பை பற்றிய கேலிக்கு அதிகமாக ஆளாகின்றனர். இது போன்ற காட்சிகளில் நடிக்கும் பெண்களும் அவர்கள் அளவில் அதை சகித்துக் கொள்கின்றனர். காட்சிகளில் இடம்பெறும் நையாண்டி திரையைத் தாண்டி நிஜத்திலும் விரிவது தான் சோகம்.
பெண்கள் இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டாலே, 30களைத் தொட்டாலே ‘சங்கு ஊதற வயசுல சங்கீதா’ என்று சொல்வதில்லையா?
சமீபத்தில் வெளிவந்த ஒரு பிரபலமான திரைப்படத்திலும் உடல் அமைப்பை விமர்சிக்கும் படியான ஒரு காட்சி இருக்கும் – சற்று உடல் பருத்த பெண்ணை ஊக்குவிக்கும் நோக்கில், படத்தின் நாயகன் அவளது உடலமைப்பை அழுத்திச் சொல்லி இருப்பார். அதைக் கேட்ட பெண் கோபம் கொடுத்த உத்வேகத்தில் விளையாடி வென்றது போல் வரும். ஆனால், பொழுதுபோக்கிலும் கூட இதை அனுமதிக்க கூடாது என்பது உளவியல் ரீதியான உண்மை.
சராசரி உயரம் இல்லாமல் குள்ளமாக இருப்பது, பருமனாக இருப்பது, மிகவும் ஒல்லியாக இருப்பது, பற்களின் வரிசை சீராக இல்லாமல் இருப்பது, கருமையான நிறம் – இவை அனைத்தையும் வைத்து இன்றளவும் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களின் உடலமைப்பை ஏளனம் செய்யும் வகையில் காட்சிகள் அமைத்து வருகிறார்கள்.
‘சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை’ என்று பழமொழியே இருக்கிறது. ஆக, மேலே கூறப்பட்ட அனைத்திலுமே பெண்கள் தான் அதிகமாக பாதிக்கப் படுகிறார்கள்.
‘அங்கவை சங்கவை’ என்பதன் மூலம் அவர்களின் நிறத்தை பேசியிருப்பார்கள். இதுவும் வரவேற்கக் கூடியது இல்லை. ஆனால் அந்த நகைச்சுவை மிகப் பிரபலம்.
“இது என்ன அவ்ளோ பெரிய விஷயம்? சிரிச்சிட்டு போய்விடலாம்” என்று தோன்றும்; ஆனால், உளவியல் ரீதியாக அணுகினால், உண்மையை, அதாவது உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ள மறுக்கும், ‘உடலமைப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும், இது மட்டும் தான் அழகு’ என்ற பிசகான எண்ணக் குவியல் இருப்பது புரியும்.
பெரும்பாலும், மனிதர்களுக்கு படித்தோ, கேட்டோ வரும் எண்ணப் பதிவுகளை விட, கண்ணால் பார்க்கும் விஷயங்கள் தான் எளிதாக, சீக்கிரமாக மனதில் பதியும்.
தற்போதைய சூழலில் நிறைய விஷயங்களில் சினிமாக்களை முன்னோடியாக வைத்துதான் மக்கள் பல செயல்களை செய்கின்றனர். அந்த வகையில் திரைத்துறை ஒரு நூலகமாக செயல்படுகிறது என்பது தான் உண்மை.
உடல் சார்ந்த ஒரு நகைச்சுவை காட்சியை எழுதி அதைத் திரையில் கொண்டு வந்து சிரிக்க வைக்க முயலும் போது, குறிப்பிட்ட பணியில் இருக்கும் துறை சார்ந்தவர்களுக்கு அது ஒரு வணிகப் பொருள்.
ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, இது போன்ற காட்சிகள் பார்ப்பவர்கள் மீது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறன்றன.அதைத் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்ட உடலமைப்பு உடையவர்களை கிண்டல் செய்து மற்றவர்களின் மனதை கஷ்ட படுத்துகிறார்கள். இதுவும் ஒரு வகையில் சமூக சீர்கேடு தான்.
ஒரு சில திரைப்படங்களில், குறிப்பாக பழைய திரைப்படங்களில், நகைச்சுவையை வேறு விதமாக கையாண்டிருப்பார்கள். நகைச்சுவை நடிகர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார்கள். சார்லி சாப்ளின் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ஆனால் இப்போது சில வருடங்களாகவே, இந்த நிலை தலைகீழாக மாறி உள்ளது. நகைச்சுவை நடிகர்கள் மற்றவர்களை கேலி செய்து தன்னை நிரூபித்துக் கொள்வது போல் காட்சி அமைக்கிறார்கள். இது நிச்சயம் மாறவேண்டிய சிந்தனை.
ஒருவரின் உடல் அமைப்பை அவமானப்படுத்துதல் அவர்களுடைய சுயமரியாதையை இழக்க செய்கிறது. இரு பாலினத்திற்கும் மனச்சோர்வு, மன அழுத்தம், பிரச்சனைகள் இருந்தாலும், பெண்களின் மீது இதன் தாக்கம் அதிகம் தான். உதாரணமாக உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாவது.
காலங்கள் மாறினாலும் பெண் பார்க்கும் சடங்குகள் மீதும் இது சார்ந்த விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.‘பொண்ணு பருமனாக இருந்தால் வேண்டாம், ஒல்லியாக இருந்தால் வேண்டாம். கருமையாகவும் இருக்க கூடாது’ என பல்வேறு நிபந்தனைகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. பெரும்பாலும் மாப்பிள்ளை எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள் – பெருநகரங்கள் தவிர்த்த பல இடங்களில் இன்று வரையில் இந்த நிலை தொடர்கிறது. பெருநகரங்களிலும் கூட நிறைய சந்தர்ப்பங்களில் ‘எப்படி இருந்தாலும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை தான்’.
‘இப்பொழுது எல்லாம் இப்படி இல்லை’ என்று சிலர் கூறினாலும், நடைமுறையில் பெரும்பாலானோர் மேற்கூறியபடி தான் செய்து வருகிறார்கள்.
இதனால் ‘ஸ்லிம்மிங் சென்டர்’ எல்லாம், “உங்கள் உடல் எடையைக் குறைத்து, ஹீரோயின் போல் ஆக்குகிறோம்” என்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இஞ்சி இடுப்பழகி படத்தில் இதை உள்ளபடி காட்டி இருப்பார்கள்.
ஆரோக்கியத்திற்காக உடல் எடையை குறைப்பது பற்றி சொல்லவில்லை. ஆனால் புற அழகிற்காக, மற்றவர் பாராட்டுவதற்காக இதைச் செய்வது நல்லதா என்று தெரியவில்லை.
தற்போதைய சூழலில் உடலில் உள்ள ஏதேதோ பாகங்களை கிண்டல் செய்து சிரிக்க வைப்பது என்கிற பெயரில் முகம் சுளிக்க வைக்கிறார்கள். இது போன்றவை ஆரோக்கியமான நகைச்சுவையாக அமைவதில்லை.
நகைச்சுவை என்பதற்கு வரம்பு உண்டு, பொது இலக்கணம் உண்டு. சிரிக்க வைப்பது எல்லாம் நகைச்சுவை எல்லாம் நகைச்சுவை ஆகாது.
நம் உடல் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு உன்னதமான வரம். மற்றவர்களுக்காக நாம் அந்த வரத்தை உருக்கி இழக்க கூடாது.
ஒரு வேளை ‘அழகான பெண்’ என்ற இலக்கண வரைமுறைக்குள் நாம் வராவிட்டாலும், நம்மை நாம் உள்ளபடி ஏற்றுக் கொண்டு, மனதில் தன்னம்பிக்கையுடன் நமக்கு இருக்கும் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதித்துக் காட்ட வேண்டும். நிறத்தையும், எடையையும் வைத்து நம்மை பேசிய வாய்கள், நமது முன்னேற்றத்தைப் பேசும் படியாக வாழ்ந்து காட்டுவோம். பேசாவிட்டாலும் வாழ்ந்து காட்டுவோம்.
ஆரோக்கியமாக, ஆனந்தமாக, நமக்கு உண்மையாக, நம்மை நாம் உள்ளபடி ஏற்றுக் கொண்டு, நம்மை நேசித்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டுவோம்.
பட ஆதாரம்: ‘ராஜகுமாரன்’ திரைப்படம்
read more...
Please enter your email address