Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
கல்விக் கடன், வங்கி செயல்பாடுகள் என குடும்பம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் நிச்சயமாக பங்கேற்று, எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடுதல், கல்விக் கடன், வங்கி செயல்பாடுகள் என குடும்பம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் நிச்சயமாக பங்கேற்று, எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிப் படிப்பு முடிந்த பின், கல்லூரிக்கு செல்லும் போது, நம்மில் பலர் வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது இயல்பு. பட்டம் பெற்று வேலையில் அமர்ந்த பின்னரே இந்த கடனை தவணை முறையில் செலுத்துவோம்.
அதற்கு முக்கிய காரணம், கல்லூரி கட்டணங்கள் ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செமெஸ்டர் முறையில் வசூலிக்கப்படும்; அப்போது முழுத் தொகையையும் கட்ட வேண்டும் என்ற நிலையில் பெற்றோர்களால் சில நேரங்களில் கட்ட முடியாமல் போவது தான்.
இது போன்ற சூழ்நிலைகளில், ‘நம் பெற்றோர்களுக்கு அதீத சுமை தரக்கூடாதே’ என்று எண்ணும் மாணவர்களுக்கு இந்த கல்வி கடன் பெரிதுவும் உதவியாக இருக்கிறது.
ஆனால் இதனைப் பெறுவதற்கென்று சில வழிமுறைகளும் விதிமுறைகளும் உள்ளன.
இந்தியக் குடியுரிமை பெற்ற, 12ம் வகுப்பு வரை படித்த, தகுதியின் அடிப்படையில் உயர் கல்விக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் யாவரும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது ஒரு அடிப்படைத் தகவல்.
‘அட! இது தான் நமக்கு தெரியுமே’ என்று நினைப்பவர்கள் இருப்பீர்கள். அதே நேரம் இதனைப் பற்றி பெரிய அளவில் எதுவும் தெரியாத மாணாக்கர்களுக்கும் இருக்கின்றனர் என்பதும் உண்மை.
அதற்கு சாட்சி, மதுரையில் நடந்த இந்த துயர சம்பவம்.
எச்சரிக்கை: துயரமான சம்பவம் ஒன்றைக் குறித்து படிக்க உள்ளீர்கள். இதனால் நீங்கள் உளரீதியான தாக்கத்தை எதிர்கொள்வீர்கள் என்று எண்ணினால், இதற்கு மேல் நீங்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
2019 ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி தாரிணி, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஐந்து மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருக்கிறார். தந்தையை இழந்தவரான அந்த பெண், தன் தாயின் சொற்ப வருமானத்தில் படித்து வந்துள்ளார்.
கல்லூரிக் கட்டணமாக மிகப் பெரிய தொகையை செலுத்த வேண்டிய நிலையில், தன் படிப்புச் செலவுக்காக கல்விக் கடன் பெற முயற்சித்துள்ளார். இந்த நேரத்தில் தான் ‘ஆன்லைனில் கடன் தரப்படும் ‘என்ற விளம்பரத்தை நம்பி ஒரு மோசடி கும்பலில் சிக்கி, சேமித்த பணத்தை இழந்து, அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கணவனையும் இழந்து பெற்ற மகளையும் இழந்து வாடும் அந்த தாய்க்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது?
அவசியம் கவனிக்கவும்: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, எண்களை உடனடியாக தொடர்பு கொண்டு பேசவும் : மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
நீங்கள் வங்கியில் அலுவல் புரிபவரா? பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ ஆசிரியராக பணி புரிகிறீர்களா? அல்லது இந்த வேலையில் இருப்பவர்கள் யாரேனும் உங்கள் குடும்பத்திலோ நண்பர் கூட்டத்திலோ இருக்கிறார்களா?
இதில் ஏதேனும் ஒரு கேள்விக்கு உங்கள் விடை ‘ஆம்’ என்று இருந்தால், நமக்கு தெரிந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் பற்றிய வழிமுறைகளை எடுத்து கூறுவோம்.
எல்லோருக்கும் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் இந்த தகவல் தேவைப்படுகிற யாரோ ஒரு மாணவர் அல்லது அவரது பெற்றோர், உற்றார் என்று எவரேனும் இருக்கும் பட்சத்தில், அந்த விவரம் வேண்டியதாக இருக்குமேயானால் வங்கியிலோ, கல்லூரியிலோ வேலை செய்பவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துவோம்.
அவ்வாறு மாணவர்கள் வங்கி அதிகாரிகளையோ ஆசிரியர்களையோ அணுகி உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளும்போது அப்பாவி மாணவி தாரிணி போன்று மோசடி கும்பலிடம் அநியாயமாக மாட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்பில்லை.
நல்ல உள்ளம் கொண்டவர்கள், விருப்பம் இருந்தால், பெற்றோர்களை இழந்த, ஆதரவு இல்லாமல் இருக்கும் மாணவ மாணவிகளிடம் இது போன்ற அவசியமான தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்து, ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். மாதா பிதா என்ற உறவுகளுக்கு பின் வருவது குரு தான். அந்த குருவாக இருக்க முயல வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
தன்னை ஈன்றவருக்கு அதிக சுமை தரக்கூடாது என்ற எண்ணமுடைய தாரணி போன்றோர் நம்மில் பலர் உள்ளனர். ‘எப்படியாவது படிக்க வேண்டும் என்று தானே ஆசைபட்டாள். அதற்கு விலை அவளது உயிரா?’ என்று மனம் வேதனை கொள்கிறது.
மாணவி தாரிணியின் தாய்க்கு கல்விக் கடன் பெறும் முறை குறித்து அடிப்படை அளவில் ஏதாவது தெரிந்திருந்தால், தன் மகளை காப்பாற்றி இருப்பார். எல்லாவற்றையும் வீட்டில் உள்ள ஆண்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று பெண்கள் இருந்து விடுவதும் இது போன்ற சம்பவங்களுக்கு ஒரு வகையில் காரணம்.
இதை தடுக்க வேண்டும். ‘எனக்கொன்றுமே தெரியாது. எல்லாத்தையும் அவர் தான் பார்த்துக்குவார்’ என்று பெண்கள் சொல்வது போதும்.
பெண்கள் வங்கி செயல்பாடுகள், இன்சூரன்ஸ், குடும்பம் சார்ந்த வரவு, செலவு, கடன், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடுதல் என குடும்பம் சார்ந்த விஷயங்களில் நிச்சயமாக பங்கேற்று, எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது பெண்களுக்கு எந்த நிலையிலும் வாழத் தெரிய வேண்டும்.
இப்படியாக பெண்கள் விழிப்புடன் செயல்பட்டு, நம்முடைய வருங்கால சந்ததிகளை கைதூக்கி கரையேற்றி, சரியான பாதையில் வழி நடத்துவோம்.
பட ஆதாரம்: Pexels.com
read more...
Please enter your email address