Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"கலைஞனின் பலவீனம்னு சில தவறுகளைச் செய்திருக்கிறேன்" என்று ஒரு தமிழ் வார இதழில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்கள்.
“கலைஞனின் பலவீனம்னு சில தவறுகளைச் செய்திருக்கிறேன்.” அண்மையில் ஒரு புகழ் பெற்ற தமிழ் வார இதழில் இப்படி சொல்லியிருக்கிறார், முன்னணி இயக்குனர் திரு. பாரதிராஜா அவர்கள்.
இதழில் வெளியான அந்த பேட்டியில், “மாலைப்பொழுதில் ஆங்காங்கே வழிதவறியிருக்கேன். ‘எப்படியும் என்கிட்டதானே வருவாய்’னு காத்திருந்த என் மனைவிகிட்டே வந்து சேர்ந்திருக்கேன். இப்ப அவகிட்டே வாழ்ற காதல் வாழ்க்கை இருக்கே… காவியம் அய்யா காவியம். மனைவி தோழியா மாறி என்னை ஆசீர்வதிக்கிறாள்” என்று சொல்லியிருக்கிறார், இயக்குனர்.
இதைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பும், நிறைய கடுப்பும் தான் வந்தது. கூடவே சில கேள்விகளும் தான்!
முதலில் தோன்றிய கேள்வி, அவர் மனைவி இவ்வாறு சொல்ல முடியுமா? அப்படியே சொன்னாலும், இச்சமூகம் அப்பெண்மணியின் மீது எம்மாதிரியான மதிப்பீடு கொள்ளும்?
அடுத்த கேள்வி, அதென்ன ‘கலைஞனின் பலவீனம்’? கலைஞன் என்றால் மனைவிக்கு உண்மையாக இருக்கக் கூடாதென ஏதாவது விதி இருக்கின்றதா என்ன? ‘ஒரு கலைஞன், அதுவும் திரைத்துறையில் இருப்பவன், அவன் தொழில் சார்ந்து பல பெண்களோடு பழக நேரிடுவதால் ஏற்படும் பலவீனம் இது’ என்று காரணம் கற்பிப்பவர்களுக்கு ஒரு கேள்வி.
அந்த கலைஞனின் மனைவி கலைத்துறையில் பணிபுரியாமல் இருக்கலாம், ஆனாலும் அவர் தன் அன்றாட வாழ்வில் பல்வேறு ஆண்களை எதிர்கொள்வார் தானே? அவரால் தவறு செய்ய முடியாதா?
கலைத்துறையில் இருந்தாலும் இல்லாவிடினும், ஆண்-பெண் இருவருக்குமே தவறு செய்ய சரிசமமான வாய்ப்பையே இவ்வாழ்வு வழங்குகின்றது. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்ய வாய்ப்பிருந்தும் அதை செய்வதில்லை. ஏனென்றால் சுயகட்டுப்பாடு என்ற ஒன்றை பெண்கள் பொதுவாக மறப்பதில்லை.
உங்களின் சுயகட்டுப்பாட்டின்மையை ‘கலைஞன்’ என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு நியாயப்படுத்தாதீர்கள்.
அது மட்டுமின்றி, ‘எப்படியும் என்கிட்ட தானே வருவாய்’ என்று மனைவி காத்திருந்ததாக சொல்வது, மனைவி ஏதோ இறுமாப்புடன் அல்லது ஒரு வகை அசாத்தியப் பொறுமையுடன் இருந்ததாக உணர்த்துகிறது. பொதுவாக பெண் பொறுமை மிகுந்தவள், ஆண் என்ன செய்தாலும் கருணை கொண்டு மன்னித்தும் மறந்தும் விடுபவள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை மேற்கோளிட்டு காட்டி, தான் செய்த செயலின் தீவிரமும், அதனால் மனைவிக்கு ஏற்பட்ட மன உளைச்சலையும் மறைத்து, அவரை ‘நாலு வார்த்தை நல்லா பேசினால்’ தன் குற்ற உணர்ச்சியும் கொஞ்சம் குறைந்து விடுமென நினைத்துக் கொள்ளும் இந்த எண்ணமும் செயலும், தன்னைத் தானே தேற்றிக் கொள்ள ஆண் செய்யும் முயற்சியே!
ஆண் கலைஞரின் ஓர் அறமற்ற செயலை ‘கலைஞனின் பலவீனம்’ என்று சர்வ சாதாரணமாக கடந்து செல்லும் இந்த சமூகம், பெண் திரைத்துறை கலைஞர்களின் பலவீனங்களையும், அது எதுவாக இருப்பினும், அவர்கள் மீதும் எவ்வித பழியும் மதிப்பீடும் இன்றி ஏற்றுக்கொள்ளுமா? இல்லை, பெண் இயக்குனர்கள் யாராவது இதே காரணத்தைச் சொல்லி, இது போன்ற செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியுமா?
ஆண்கள் போலவே பெண்களுக்கும் தவறு செய்ய சம உரிமை கோருவது அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம்.
ஆண் பெண், இருவருக்குமே வழிதவறிப்போக சமமான சந்தர்ப்பங்கள் இருந்தாலும், பெண்களை இந்த சமூகம் செய்யும் மதிப்பீடுகள், அவர்களது தவறுகளை அணுகும் முறையில் மட்டும் ஏன் சமமற்ற தன்மையில் உள்ளது?
நேர் வழியில் செல்ல ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை, சம பொறுப்பு இருக்கலாம் தானே?
இதே இயக்குனர் இயக்கிய ‘புதுமைப் பெண்’ திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், தன் நடத்தையை சந்தேகித்த கணவனைப் பிரியும் முன், ஆண்-பெண் சமத்துவமின்மையை போதிக்கும் இதிகாச புத்தகங்களைக் குழி தோண்டி புதைத்துவிட்டு புதுமைப்பெண்ணாக புறப்படுவாள், நாயகி.
இயக்குனர் தன் படைப்பின் மூலம் சொன்ன கருத்துக்கும், தன் தனிப்பட்ட வாழ்வில், அவரே செய்ததாக சொல்லும் சில செயல்களுக்கும் இருக்கும் வேற்றுமை, நிச்சயம் நகைமுரணே!
பட ஆதாரம்: ‘புதுமைப்பெண்’ திரைப்படம்
read more...
Please enter your email address