Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
குழந்தைகள் நல்லபடியாக வளரத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது தாயின் கடமை மட்டுமல்ல, தந்தையின் கடமையும் கூடத்தான்.
‘குழந்தைகளின் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி நல்லபடியான இருக்கத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது தாயின் கடமை மட்டுமல்ல, தந்தையின் கடமையும் கூடத்தான்’ என்கிறார், எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ்.
அன்புத் தோழிகளே,
இது வரை எழுதிய கடிதத்தில் நமது உரிமை பற்றிப் பேசினோம். இந்தக் கடிதம் நமது கடமை பற்றிப் பேசப் போகிறது.
அதற்கு முன்னால் ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. அரசு வேலையில் இருப்பவர். ஓய்வு பெறுவதற்கு சில மாதங்கள் முன்பு தனது கணவரை விவாகரத்து செய்தார். ஏன் எனக் கேட்ட போது அந்தப் பெண்மணி சொன்னவைகளை அவரது வார்த்தையிலேயே தருகிறேன்.
“அவரு! எனக்கு ரொம்ப நாளா எனக்கு துரோகம் செஞ்சிட்டு இருந்தாரு. எனக்கு இது 15 வருசத்துக்கு முன்னாலேயே தெரியும். ஆனா அப்ப என் மகனும், மகளும் சின்னப்பசங்க. மகளுக்குக் கல்யாணம் பண்ணணுமே மேடம்? நான் விவாகரத்து ஆனவள்னு தெரிஞ்சா என் மகளுக்குக் கல்யாணம் எப்படி நடக்கும்? அதனால பொறுத்துக்கிட்டுப் பேசாம இருந்தேன். ஆனா இப்ப அவளுக்குக் கல்யாணம் ஆயிடிச்சு. மகனும் படிச்சு முடிச்சிட்டான். அதான் தைரியமா விவாகரத்து செஞ்சேன்” என்றார்.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்மணி கணவனது மோசமான நடத்தையை சகித்துக்கொண்டிருக்கிறாள். அதனால் அவள் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பாள்?
ஏன் 15 ஆண்டுகள் அந்தப் பெண்மணி மன உளைச்சலோடு காத்திருந்தாள் விவாகரத்துக்கு? காரணம், ‘தனது குழந்தைகள வாழ வைக்க வேண்டும்’ என்ற எண்ணம். அதைப் பற்றி யோசிக்கும் போது தான் எனக்கு பளிச்சென ஒரு உண்மை புலப்பட்டது.
நம் நாட்டுப் பெண்களுக்கு கடமை உணர்வு என்பது தேவைக்கு அதிகமாக இருக்கிறது.
விளக்கமாகச் சொல்கிறேன். அந்தப் பெண்மணி எதற்காக 15 ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டும்? கணவன் நடத்தை சரியில்லாதவன் என்று தெரிந்த உடனே விலகியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் தடுத்தது எது? குழந்தைகள் மீதான அவளது கடமை உணர்வு.
காலம் காலமாக, ‘குழந்தைகள் தாயின் பொறுப்பு மட்டுமே’ என்ற எண்ணம் நம் பெண்கள் மீதில் திணிக்கப்பட்டு விட்டது.
ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் தனது உரிமையை நிலைநாட்ட எதிர்த்துப் பேசினால் “என்ன உங்கம்மா உன்னை இப்படி வளர்த்திருக்காங்க?” என்ற வார்த்தையும், ஒரு பெண் சுதந்திராமாக வெளியில் சென்று வந்தால் “என்ன இப்படி கண்ட நேரத்துல ஊரைச் சுத்துறே? உங்கம்மா எதுவும் சொல்ல மாட்டாங்களா?” என்ற வார்த்தையும் கேட்காத நாளே இல்லை.
ஆனால் இதுவே ஒரு பெண் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றாள், அல்லது ஏதாவது பரிசு வாங்கினாள் என்றால் “எல்லாம் உன்னோட அப்பா அளித்த ஊக்கம் தான், இல்ல?” என்பார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்?
இந்தச் சமூகம் அங்கீகரிக்கும் செயலை ஒரு பெண்ணோ ஆணோ செய்தால் அதன் காரணம் தந்தை. ஆனால் அதுவே சமூகம் அங்கீகரிக்காத செயலை அவர்கள் செய்யும் போது கெட்ட பேர் தாய்க்கு. இதைத்தான் நமது ஆண் வர்க்கம் ஆண்டாண்டு காலமாக பெண்களின் மீதான தாக்குதலாகச் செய்து வருகிறது.
குழந்தை வளர்ப்பில் தாய்க்கும் தந்தைக்கும் சரி பங்கு இருக்கிறது. குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக்கொடுப்பார் தந்தை. பலன் அவர் குழந்தைகளின் அன்புக்கு உரியவாராகத் திகழ்வார். ஆனால் தாயோ? குழந்தைகளின் உடல் நலனுக்கு இது சரியில்லை, ‘இதைச் சாப்பிடாதே!’ எனச் சொல்லும் போது அவள் விரோதியாகத் தெரியத் தொடங்குகிறாள்.
குழந்தைகள் உடல்நலம், மன நலம் இவற்றின் மேல் தந்தைக்கு அக்கறை கிடையாதா? அவர்கள் அதைப் பற்றி அவன் ஏன் கவலைப் படுவதில்லை? காரணம் “எல்லாத்தையும் அவ பார்த்துப்பா” என்ற விட்டேத்தியான மனநிலை தான். பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பொறுப்புகளும் கடமை உணர்வும்? ஆணுக்கு ஏன் இல்லை?
மேலே சொன்ன அந்தப் பெண்மணியின் உதாரணத்தையே மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள். தன் குழந்தைகளுக்கு மணமாக வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தத் தாய்க்கு இருந்ததைப் போல தந்தைக்கும் இருந்திருந்தால் தொடர்ந்து மனைவிக்கு துரோகம் செய்திருப்பானா?
‘ஒரு தந்தையாக அவனுக்கு கடமை இல்லை’ என அவனது கருத்தை அந்தப் பெண்மணி நன்றாகவே வளர்த்து விட்டிருக்கிறாள். ‘விவாகரத்து செய்வது’ என முடிவு செய்த பிறகு 15 ஆண்டுகள் காத்திருப்பானேன்? காரணம், ‘தான் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்குப் பொறுப்பு’ என்ற தேவையற்ற கடமை உணர்வு.
இந்த உணர்விலிருந்து நாம் விடுபட வேண்டும். பொறுப்பு, கடமை இரண்டுமே தாய் தந்தை இருவருக்கும் பொது. ஒரு குடும்பம் நலமாக வாழ, குழந்தைகளின் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி நல்லபடியான இருக்கத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவது தாயின் கடமை மட்டுமல்ல, தந்தையின் கடமையும் கூடத்தான்.
இதில் தந்தை பொறுப்பற்றவானாக இருந்தால் அதை அந்தத் தாய் மூடி மறைக்கத் தேவையில்லை. அவனுடன் பேசி புரிய வைக்க முயற்சி செய்யலாம். அப்படியும் அவன் திருந்தவில்லெயென்றால் மொத்தப் பொறுப்பையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்வதற்குப் பதில் குழந்தைகளிடம் ‘அவன் இப்படித் தான், சரியான தந்தை இல்லை’ என்று விளக்கிச் சொல்லலாம். ஒரு வகையில் இது வளரும் குழந்தைகளை மேலும் பொறுப்பானவர்களாக ஆக்கும் என்பதோடு, ‘தந்தைக்கும் பொறுப்பு உண்டு’ என முதலில் அவர்கள் உணர்வார்கள்.
குழந்தை பெறுவதை இயற்கை பெண்களிடம் ஒப்படைத்து இருக்கிறது என்பதற்காக குழந்தைகளின் முழுப் பொறுப்பும் பெண்களைச் சேர்ந்தது என நினைக்கத் தேவையில்லை.
குழந்தை உற்பத்தியில் எப்படி அவனுக்கும் பங்கு உண்டோ அதே போல குழந்தை பராமரிப்பிலும் வலர்ப்பிலும் அவனுக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு.
இதில் ஆண்களையும் கட்டாயப்படுத்தியாவது ஈடுபட வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு மற்றும் இதர வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று கூட்டி வருவது, அவர்களது நண்பர்கள் யார் யார், எந்த மாதிரியான தாக்கத்தை தங்கள் குழந்தைகள் மேல் அந்த நண்பர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்பவற்றை தாய் மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்பதில்லை. தந்தையும் செய்ய வேண்டும்.
இத்தனை நூற்றாண்டுகளாக குழந்தையின் பொறுப்பும் கடமையும் தாயை மட்டுமே சேர்ந்தது என்றே மனதில் பதிய வைத்து வளர்க்கப்பட்ட ஆண்களால் அதை அத்தனை எளிமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதைச் செய்யத்தான் வேண்டும். இது தான் நமது முதல் கடமை.
அதைச் செய்யும் போது மற்ற பெண்களின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை. ஒரு பெண் தனது கணவனை குடும்பப் பொறுப்பு மிக்கவனாக ஆக்க முயற்சி செய்யும் போது குடும்பத்தில்/நட்பில் இருக்கும் மற்ற பெண்கள் அதனை கிண்டல் செய்வது என்பது நமக்கு நாமே கெடுதல் செய்து கொள்வது போல.
அதற்கு பதில், அவளை உற்சாகப்படுத்தி, ஒத்துழைப்புக் கொடுத்து, தன் வீட்டு ஆண்களையும் பொறுப்பு மிக்கவனாக ஆக்க பெண்கள் முயற்சி செய்வார்களேயானால், நம் சமூகம் சிறப்பானதாக ஆகிவிடும். அதை சாதிப்பது நம் கையில் தான் இருக்கிறது. ஆகையால் தேவையற்ற கடமை உணர்வையும், அதிகமாகப் பொறுப்புக்களைச் சுமக்கும் மனநிலையையும் விட்டு நாம் வெளியே வர வேண்டும்.
கடமை உணர்வே கூடாது என நான் சொல்லவில்லை. ஆனால் கடமை உணர்வு நமக்கு மட்டுமேயானது இல்லை என்று தான் சொல்கிறேன். மீண்டும் அடுத்த கடித்ததில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு அன்புத்தோழி,ஸ்ரீஜா வெங்கடேஷ்.
பட ஆதாரம்: ‘கேளடி கண்மணி’ திரைப்படம்
read more...
Please enter your email address