தமிழ் சினிமாவின் மறக்க முடியாத அம்மாக்கள்!

தமிழ் சினிமாவும் அம்மா சென்டிமென்ட்டும் சரியான வெற்றிக் கூட்டணி. திரையில் தோன்றிய சில சூப்பர் 'அம்மா'க்களின் பட்டியல் இதோ!

தமிழ் சினிமாவும் அம்மா சென்டிமென்ட்டும் சரியான வெற்றிக் கூட்டணி. திரையில் தோன்றிய சில மறக்க முடியாத சூப்பர் ‘அம்மா’க்களின் பட்டியல் இதோ!

அம்மா என்றாலே ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே’, ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ என்று மனசுக்குள் பாட்டுக்கு பின் பாட்டு ஓடும் அளவுக்கு, அம்மா சென்டிமென்டில் அஸ்திவாரம் போட்டு எழுந்து நிற்பது தமிழ் சினிமா.

‘அம்மா ன்னா ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுக்கணும்…இப்படி அப்பா கிட்ட போட்டுக் கொடுக்கக்கூடாது’ என்று அம்மாவுக்கு இலக்கணம் சொல்லும் டயலாக்குகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் இல்லை.

அதே தமிழ் சினிமாவில், ‘அம்மா என்றால் இப்படித் தான்’ என்ற பொது இலக்கணத்தை அசைத்துப் பார்த்த அம்மாக்கள் சிலரின் பட்டியல், இதோ:

ஆல்தியா (தரமணி)

குட்டைப் பாவாடை போட்டாலும், அம்மா என்றால் அம்மா தான். கௌரவமான வேலை, சொந்த சம்பாத்தியம், இழையோடும் மிடுக்கு என்று வடிவமைக்கப்பட்ட தாயின் கதாபாத்திரத்தை மிக அழுத்தமாக முன்வைக்கும் திரைப்படம்.

‘அம்மா என்றாலே பால் போல் தூய்மை’ என்ற எண்ணத்தை உடைத்து, ‘அம்மாக்களுக்கும் விருப்பு, வெறுப்பு, ஏற்றம், தாழ்வு, ஏக்கம் என எல்லாம் உண்டு – ஆனாலும் அவள் அம்மா தான்’ என்று சொல்லும் படம். அனைத்தையும் தாண்டி ஆல்தியா (ஆண்ட்ரியா) மீது மரியாதை தான் மிஞ்சும் (குறிப்பாக பெண்களுக்கு).

பட ஆதாரம்: ‘தரமணி’ திரைப்படம்

கணவன் இன்றி தனியே மகனை வளர்க்கும் சிங்கிள் அம்மா, அத்தனை பிரச்சனைகளுக்கு நடுவிலும் மகனிடம், ‘உனக்காக தனி ஒருத்தியா நான் என்ன பாடு படுகிறேன் மகனே…’ என்றெல்லாம் தேம்பி அழுது புலம்பி அனுதாபம் தேடிக் கொள்ளாமல், நிலைமையை சமாளித்து, விழுந்து எழுந்து நிற்கும் கம்பீரம், தனித்தாயாக பிள்ளைகளை வளர்க்கும் அத்தனை இரும்பு மனுஷிகளுக்கும் ஒரு அருமையான சமர்ப்பணம்.

தமயந்தி (இறுதிச்சுற்று)

‘காலாகாலத்தில் உன்னை ஒருத்தன் கையில் பிடித்து கொடுக்கணும்’ என்கிற சராசரி அம்மக்களுக்கு நடுவில், வறுமையால் செதுக்கப்பட்டவராக, “நம்ம லக்ஸ் க்கு போலீஸ் வேலை கெடச்சா தானே ஊருக்குள் நமக்கு மரியாதை கிடைக்கும்” என்று தனித்து நிற்கும் ‘சபாஷ்’ அம்மா இவர்!

பட ஆதாரம்: ‘இறுதிச்சுற்று’ திரைப்படம்

“தரம்சாலாவுக்கு ட்ரெயினிங் எடுத்துக் கொள்ள உங்கள் இரண்டு மகள்களையும் என்னோடு அனுப்பி வையுங்கள்” என்று பாக்ஸிங் கோச் (மாதவன்) கேட்டதும், “வயசு பொண்ணுங்களை உன்னை நம்பி அனுப்பவா” என்று கேட்காத ‘நம்பிக்கை’ அம்மா, தமயந்தி (பாலிந்தர் கவுர்).

அப்பா, பெரிய அளவில் அனுசரணையாக இல்லாவிட்டாலும், தன்னுடைய மகள் மதிக்கு (ரித்திகா சிங்) அன்பும், தன்னம்பிக்கையும், வலிமையுமாய் உடன் நின்ற தாய் தான் தமயந்தி என்பது, நீளமான டயலாக்குகள் இன்றியே பார்ப்பவர் மனதில் பதியும்.

வசந்தி (36 வயதினிலே)

தன்னுடைய உலகத்தையே தன் குடும்பத்துக்குள் சுருக்கிக் கொண்ட சராசரி அம்மா தான் வசந்தி (ஜோதிகா). நிலையான அரசுப்பணி, பொழுதுபோக்கிற்கு சீரியல்; மகள், கணவன், மாமியார், மாமனார், ஆஃபீஸ் பாலிடிக்ஸ் என்று வாழும் சராசரிப் பெண்ணாக தோன்றும் வசந்தி, வாழ்வின் தவிர்க்க முடியாத நிகழ்வுகளால் திருப்பங்கள் கண்டு, சுய அடையாளத்துடன் எழுந்து நிற்கும் கதை இது.

‘கல்லூரி நாட்களில் திறமையும் துடிப்புமாய் மிளிர்ந்த அந்த பழைய வசந்தி எங்கே?’ என்ற கேள்வி, திருமணத்திற்குப் பின் தன்னை மாற்றிக்கொண்டு, சுயத்தை இழந்த, தொலைத்த, எத்தனையோ அம்மாக்களுக்கான அலாரம் மணி!

கிளைமாக்ஸ் காட்சியில், ‘எங்க அம்மா எனக்கு இன்ஸ்பிரெஷன் (முன்னோடி)’ என்று மகள் நித்திலா பதிவு செய்வது, எல்லா அம்மாக்களுக்கும் ஒரு உத்வேக டானிக்!

வயது, சூழ்நிலை, குடும்பப் பொறுப்பு என்று எதுவும் ஒரு பெண் எழுந்து நின்று சாதிப்பதற்கு தடை அல்ல என்று உணரவைப்பவள், வசந்தி!

கோகிலாவின் தாய்
(கோலமாவு கோகிலா)

மகனை எல்லா சூழ்நிலையிலும் தாங்கிப் பிடிக்கும் அம்மாக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மகளையும் அதே போல் தாங்கிக் கொள்ளும் தாய் இருக்கிறாரா? ‘நான் இருக்கிறேன்’ என்று நிற்கிறார், கோகிலாவின் தாய் (சரண்யா பொன்வண்ணன்).

படத்தில் எந்த இடத்திலும் இவர் பெயர் என்ன என்பதே சொல்லப்படாவிட்டாலும், ‘அம்மா’ என்று, சூழலுக்கேற்ப யோசித்து மகளை அணைத்துச் செல்லும் தாயாக மனதில் பதியும் கதாபாத்திரம்.

‘அடிப்பாவி, என் வயித்துல வந்து பொறந்தியே’ என்று ஏசாமல், “உனக்கொரு பிரச்சனை ன்னா அது நம்ம எல்லாருக்கும் தானே? நாம எல்லாரும் ஒண்ணு தானே” என்று இக்கட்டான சூழ்நிலையில் மகளை ‘கை கழுவாமல்’, தாங்கி நிற்கும் அம்மா இவர்.

‘தெரிஞ்சே தப்பு பண்ற பொண்ணுக்கு அம்மா துணையாக இருப்பது சரியா’ என்று லாஜிக் கேட்கிறீர்களா? ‘ரௌடி’க்களை, பெண்களை விடாமல் பின்தொடர்ந்து காதலை வற்புறுத்தித் திணிக்கும் இளைஞர்களை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளும் போது பார்க்காத லாஜிக் எல்லாம் திரையில் தோன்றும் அம்மாக்களிடம் எதிர்பார்த்தால், முரண் எங்கே என்று புலப்படும்.

இந்திரா (கன்னத்தில் முத்தமிட்டால்)

பெற்றால் தான் பிள்ளை என்றில்லை; தாய்மை என்பது மனவழி ஊற்று என்றே வாழும் இந்திரா (சிம்ரன்), மகள் (கீர்த்தனா) தன்னை ஈன்ற தாயைக் (நந்திதா தாஸ்) காண விழையும் சூழ்நிலையில், இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் காட்சிகள் நெஞ்சை விட்டு மறையுமா?

தான் ஈன்ற பிள்ளைகளை விட்டுவிட்டு வளர்த்த மகளின் ஏக்கம் தீர்க்க அவளோடு இலங்கைக்கு புறப்படுபவள், போகிற போக்கில் ‘மாற்றாந்தாய்’க்கான பிம்பங்களை ஓரந்தள்ளி விட்டு போகிறாள்.

“என்னைப் போலத் தானடி நீ இருக்க” என்று மகளிடம், ‘பெறாவிட்டாலும் நான் உன் அம்மா’ என்று சொல்லாமல் சொல்லும் இந்திரா வெளிப்படுத்தும் கோபம், ஏக்கம், எதிர்பார்ப்பு, பயம் என்று மகளுடன் சின்ன சண்டைகளும் செல்லப் பரிமாற்றங்களுமாய் உணர்வுகளின் அழகு, மனதில் ஊன்றி நிற்கும்.

இறுதிக்காட்சியில் ‘நீ தான் என் அம்மா’ என்று மகள் கட்டியணைத்து முத்தமிடுகையில் இந்திராவுடன் சேர்ந்து நாமும் உருகித்தான் போவோம்.

இவர்களைத் தவிர உங்கள் மனதில் பதிந்த தமிழ்த்திரை அம்மா யார்? நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தலையங்கப் பட ஆதாரம்: ‘தரமணி’ திரைப்படம்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,854 Views
All Categories