அம்மா, நீங்கள் ஏன் மற்றவர்கள் என் வளர்ப்பைக் குறித்து என்ன சொல்வார்களோ என்று கவலைப் படுகிறீர்கள்?

'குழந்தைகளை அதிகாரத்தால் அல்ல, அன்பால் நெறிப்படுத்தி இயல்பாய் வளர்க்க வேண்டும்' என்கிறார், குழந்தை வளர்ப்பு நிபுணர், கோதா ஹரிப்ரியா.

‘அம்மா அப்பாக்களே, குழந்தைகளை அதிகாரத்தால் அல்ல, அன்பால் நெறிப்படுத்தி இயல்பாய் வளர்க்க வேண்டும்’ என்று முன்மொழிகிறார், குடும்ப வாழ்வியல் மற்றும் குழந்தை வளர்ப்பு நிபுணர், கோதா ஹரிப்ரியா.

‘குழந்தைகள் எப்போதும் மூத்தோர், பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்பு தெற்காசிய சமூகங்களில் நிலவி வருகிறது.

அனுபவசாலிகளின் அறிவுரைகளும் வழிகாட்டுதலும் வாழ்க்கைக்கு அவசியமானவை.

ஆனால், அவர்களுடைய எண்ணங்கள் மட்டுமே வழி, மூத்தோர் சொல்லே கதி என்று கிடந்திருந்தால், இங்கே புதிய முயற்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், சமூக முன்னேற்றம், அதிலும் குறிப்பாக பெண்களின் முன்னேற்றம் துளியும் சாத்தியமாகி இருக்காது.

சுயபுத்தி வேண்டாம், சொல்புத்தி போதும் என்று இருந்து விட முடியாது. அந்த சுயசிந்தனை நல்லபடியாக அமைவதற்கான அடித்தளம், நல்ல முறையில் பிள்ளைகளை வளர்ப்பதில் உள்ளது.

‘என் பிள்ளை நான் சொல்வதை கேட்பதே இல்லை’ என்று புலம்பும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு அல்ல, செய்வதை பார்த்தே வாழ்க்கையை, பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது உளவியல் பூர்வமான உண்மை.

அதிகாரத்தால் அல்ல, அன்பாய் வளர்க்க வேண்டும்

‘எப்படி பிள்ளை வளர்ப்பது?’ என்கிற கேள்விக்கு பதில் அளிக்கிறார், கோவையைச் சேர்ந்த கோதா ஹரிப்ரியா. பிரபல குடும்ப வாழ்வியல் மற்றும் பிள்ளை வளர்ப்பு நிபுணர் ஆன இவர், குழந்தைகளை அதிகாரத்தால் அல்ல, அன்பால் நெறிப்படுத்தி இயல்பாய் வளர்க்க வேண்டும் என்று முன்மொழிகிறார்.

குடும்ப வாழ்வியல் மற்றும் பிள்ளை வளர்ப்பு நிபுணர், கோதா ஹரிப்ரியா

அதிலும், மிக இளவயதில், உலகமே பெற்றோர் தான் என்று இருக்கும் சூழலில், பிள்ளைகள் முழுக்க முழுக்க நாம் என்ன செய்கிறோமோ அதைப் பார்த்தே செய்து பழகுவார்கள். பழக்கமே வழக்கமாகி, அவர்களுடைய குணாதிசயமாக பரிணாம வளர்ச்சி அடையும்.

ஆக, இந்த நிலைப்பாட்டின் படி, நாம் பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்கள் கண்ணோட்டத்தில் இருந்து யோசித்து செயல்பட்டு வந்தோமானால், பிள்ளைகளும் அதை உள்வாங்கி, பின்னாளில் சகமனிதர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் கனிவு நிறைந்த நன்மக்களாய் வளர்ந்து வருவர் .

‘இல்லை, நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும்’ என்று எல்லா சூழ்நிலையிலும் கட்டாயப்படுத்தினால், அந்த பிஞ்சு உள்ளம் காயப்படுவதோடு, சுயசிந்தனையே இல்லாமல் போகலாம். அல்லது, அவர்கள் மீது அவர்களது பெற்றோர் செலுத்திய அதே அதிகாரத்தை, அவர்கள் பிறரின் மீது சுமத்தத் துவங்கலாம்.

‘குழந்தைகள் தான் மூத்தோர், பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்ள வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வெளிவந்து, அந்த சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களுக்கும் ஆசைகள், விருப்பங்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு, இளந்தளிர்களின் உணர்வுகளையும் மதித்து செயல்பட்டால், அவர்கள் நல்ல மனிதர்களாக, சக மனிதர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக வளர்வது திண்ணம், என்பது கோதா ஹரிப்ரியாவின் கருத்து.

இன்ஸ்டாகிராம் தளத்தில், ‘குழந்தையின் கண்ணோட்டத்தில் இருந்து‘ என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள ‘திறந்த கடிதங்கள்’ மிகப் பிரபலமானவை.

அதிகாரத்தில் அல்ல, அன்பில் விளைந்த நல்ல பிள்ளைகளை, நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்று விழையும் பெற்றோருக்காக, அவற்றுள் சில கடிதங்களின் சாரம், இதோ:

அன்புள்ள அம்மா, இது உங்கள் குழந்தை எழுதும் கடிதம்

“அன்புள்ள அம்மா,

நான் வளர்ந்து, தன்னம்பிக்கை மற்றும் சுயசிந்தனையோடு, நல்ல முடிவு எடுக்கும் திறனோடு இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

ஆனால், “எனக்கு சாப்பிட இவ்வளவு போதும்; இதற்கு மேல் எனக்கு உணவு வேண்டாம்”, என்று நான் உங்களிடம் வெளிப்படுத்தும் போது, என்னுடைய முடிவை புறக்கணித்து, என்னை மேலும் மேலும் வற்புறுத்தி சாப்பிட வைப்பதன் மூலம், ‘எனக்கு முடிவுகள் எடுக்கும் திறனே இல்லை’ என்று தோன்ற வைக்கிறீர்களே, அம்மா…

அப்புறம், நீங்கள் ஏன் என் வளர்ப்பைக் குறித்து ‘மற்றவர்கள் என்ன சொல்வார்களோ’ என்று கவலைப்படுகிறீர்கள், அம்மா?

நீங்கள் ஏன் ‘நல்ல தாய்’ என்கிற நற்பெயரையும் அங்கீகாரத்தையும் அவர்கள் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்தவரிடம் நல்ல பெயர் வாங்க நீங்க முயற்சிக்கும் போதெல்லாம், என்னுடைய தேவைகள் உங்களுக்கு முக்கியம் இல்லை, ‘வெளியில் என்ன சொல்வார்களோ’ என்பது தான் உங்களுக்கு முக்கியம் என்று எனக்கு தோன்ற வைக்கிறீர்கள்.

அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சியே, அவர்களுக்காகவே நாம் போலியாக ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமா, அம்மா?

இப்படிக்கு,
உங்கள் குழந்தை.”

நீங்கள் உங்கள் குழந்தையையும், உங்கள் குழந்தை உங்களையும் புரிந்து கொண்டு வளர்ந்தால்…

‘நீ என்ன உன் பிள்ளையை இப்படி வளர்த்திருக்க?’ என்கிற பேச்சுக்கள் எப்போதும் ஓயப்போவது இல்லை. அது நம் கைகளில் இல்லை.

அதே சமயம், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு ஆழமான புரிதலும், அன்பும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உங்கள் கைகளில் உள்ளது.

“பரஸ்பர மரியாதையோடு, நீங்கள் உங்கள் குழந்தையையும், உங்கள் குழந்தை உங்களையும் புரிந்து கொண்டு வளர்ந்தால், நீங்கள் ‘பெற்றவள்’ என்ற அதிகாரத்தை எடுக்காமலேயே உங்கள் பிள்ளை நற்பண்புகளுடன், நல்ல நெறிகளோடு தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக வளர்வது உறுதி”, என்கிறார் கோதா ஹரிப்ரியா.

அன்பினால் முடியாதது ஏதும் உளதோ உலகில்?

பட ஆதாரம்: ’24’ திரைப்படம்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,043 Views
All Categories