‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ முறையில் பிள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோரா நீங்கள்?

பிள்ளைகளை பொத்திப் பொத்தி வளர்ப்பதும் நல்லது தானா? அப்படி வளர்க்கும் 'ஹெலிகாப்டர்' பெற்றோரா நீங்கள் என்று இனம்காண இந்த 8 கேள்விகள் உதவலாம்.

பிள்ளைகளை ரொம்பவும் பொத்திப் பொத்தி வளர்ப்பது நல்லது தானா? அப்படி தன் கட்டுக்குள் வைத்து பிள்ளை வளர்க்கும் ‘ஹெலிகாப்டர்’ பெற்றோரா நீங்கள் என்று இனம்காண இந்த 8 கேள்விகள் உங்களுக்கு உதவலாம்.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சம்பவங்கள் என்னை இந்த கட்டுரையை எழுதும்படி தூண்டிவிட்டன.

பயமின்றி திறந்த மனதுடன் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உதவும்படியான உரை ஒன்றை ஆற்றிக் கொண்டிருந்தேன். மாணவப் பருவத்தில் ஒவ்வொரு கணிதத் தேர்வுக்கு முன்னும் பயந்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியவள் என்ற முறையில், எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல், இறுக்கமின்றி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நான் எடுத்துரைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனாலும், என்னுடைய இந்த உரை முடிந்த உடனேயே பெற்றோர் ஒருவர் என்னை அணுகி, ‘என்னுடைய பிள்ளைக்கு தேர்வு குறித்த அச்சமே இல்லை. எப்படியாவது அவனுக்கு சிறிதேனும் அச்சம் வரும்படி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார்!

இதற்கு இரண்டு நாட்கள் கழித்து, என்னிடம் கவுன்செலிங் செய்து கொள்வதற்காக தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு வந்த பெற்றோர்களோ, ‘பள்ளியில் வகுப்பின் முதல் மாணவனாக இருந்த பையன், கல்லூரி சென்றதும் ரொம்பவும் ‘ஜாலி’யானவனாக, பொறுப்பற்றவனாக மாறிப்போய்விட்டான். எவ்வளவு சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் படிக்க மாட்டேன் என்கிறான். ஆனால் இதைத் தவிர தேவையற்ற மற்ற விஷயங்களில் கவனம் ரொம்பவும் கூடிப் போய்விட்டது’, என்றார்கள்.

எல்லைமீறிய கவனிப்பு மற்றும் தலையீட்டினால் ஏற்பட்ட பாதிப்பு

இரண்டு பிள்ளைகளையும் கவுன்செலிங் செய்து பார்த்ததில், மேலோட்டமாக வெவ்வேறு பிரச்சனை போன்று தெரிந்தாலும், இருவருமே அவரவரது பெற்றோர்களின் எல்லைமீறிய கவனிப்பு/தலையீடு மற்றும் கட்டுப்பாட்டினால் பாதிக்கப் பட்டவர்கள் என்று புரிந்து கொண்டேன். இந்த எல்லைமீறிய கண்டிப்பு/கவனிப்பிற்கு ‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ என்ற சிறப்புப் பெயர் அளித்தவர், புகழ்பெற்ற குழந்தை உளவியலாளர் மற்றும் சைகோதெரபிஸ்ட், டாக்டர். ஹெய்ம் ஜி ஜினாட்.

‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ என்றால் என்ன?

1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘பெற்றோர்க்கும் டீன்-பருவ பிள்ளைகளுக்கும் மத்தியில்‘ என்கிற தன்னுடைய புத்தகத்தில், ‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ என்கிற பதத்தை பிரயோகித்துள்ளார், டாக்டர். ஹெய்ம் ஜி ஜினாட்.

பிள்ளைகள் மீது அளவுக்கு மீறிய பாசம், கட்டுப்பாடு, அவர்களுடைய நல்வாழ்வு சார்ந்த பயம், பதற்றம் ஆகியவற்றின் தூண்டுதலால், அவர்களை அதீத கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இயல்பாக மலர வேண்டியவர்களை தன் இஷ்டப்படி மட்டுமே வளர்ப்பதற்கு பெயர் தான் ‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்‘.

நீங்கள் ‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ செய்யும் பெற்றோரா?

இந்த 8 கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆமா, இல்லையா என்பதைப் பொறுத்து நீங்கள் ‘ஹெலிகாப்டர் பேரெண்டிங்’ செய்யும் பெற்றோரா என்பதை அறிந்து கொள்ளலாம்.

  1. உங்கள் பிள்ளையுடைய ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு அத்துப்படியா? (இந்தக் காலகட்டத்தில் இது அவசியம் தான் – ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு)
  2. ‘எனக்கு இது வேண்டும்’ என்று குழந்தை கேட்பதை தலையை வைத்து கூட வாங்கித் தந்து/செய்து கொடுத்து ‘இருப்பதிலேயே மிகச் சிறந்த உடைகள், பொம்மைகள், படிப்பு, வசதி என்று என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும்’ என்றே வாழ்பவரா?
  3. பிள்ளையின் பள்ளிக்கூட ‘ப்ராஜெக்ட் வொர்க்’ முதற்கொண்டு அனைத்து விஷயத்திலும் பங்கேற்று, ஊரெல்லாம் தேடி அதற்கு தேவையானவற்றை வாங்கி, தன் பிள்ளைக்குத் தான் முதல் மார்க், ‘சிறந்த ப்ராஜெக்ட்’ என்ற பாராட்டெல்லாம் கிடைக்க வேண்டும் என்று இரவெல்லாம் கண்விழித்து உழைப்பவரா?
  4. பிள்ளைகளை ‘சூப்பர் ஹீரோ’க்களாகவே பார்த்து, பாவித்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பிறரிடமும் இதைப் பற்றியே பேசி பூரித்துப் போகும் வழக்கம் உடையவரா?
  5. பிள்ளைகள் மேல் ஒரு சின்னக் கீறல் கூட விழுந்து விடக்கூடாது என்று, கைகழுவ மினெரல் வாட்டர், அழுக்காகாத விளையாட்டுக்கு மட்டுமே அனுமதி, ‘ஹச்’ என்று தும்மினால் கூட டாக்டரிடம் அழைத்துப் போவது என்று இருப்பவரா?
  6. பிள்ளை வளர்ப்பு குறித்த புத்தகங்கள், இலக்கணங்கள் என அத்தனையையும் கற்றுக் கரைத்துக் குடித்து அதில் விளக்கியுள்ள படியே நம் பிள்ளைகள் வளர்வதும், நடந்து கொள்வதும் முக்கியம், அது மட்டும் தான் சரி என்று நினைப்பவர்களா?
  7. அடம்பிடிக்கும் பிள்ளைக்கு முதலில் வளைந்து கொடுக்காமல், இறுதியில் வேறுவழியின்றி பணிந்து, அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுப்பவரா?
  8. “நீ இவரோடு மட்டுமே நட்பு பாராட்டலாம்” என்று ‘முதல் 10 ரேங்க் வரிசைக்குள் வருபவர்’ போன்ற தகுதி உடையவர்களை மட்டுமே உங்கள் பிள்ளையின் நண்பர்களாக ஏற்க வேண்டும் என்று நிபந்தனை போடுபவரா? அப்படி உங்களுடைய பிள்ளையின் நண்பர் யாரையேனும் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றல், உங்கள் பிள்ளையிடம் அந்த நட்பையே துண்டிக்க வேண்டும் என்று சொல்பவரா?

இவை சார்ந்து தான் உங்கள் பிள்ளை வளர்ப்பு முறை உள்ளது என்றால், நீங்களும் ‘ஹெலிகாப்டர்’ பெற்றோர் தான்.

இது ஏன் நல்லது அல்ல என்று புரிந்து கொள்வோம்

இப்படியாக நாம் பிள்ளைகளை ரொம்பவும் பொத்திப் பொத்தி வளர்ப்பதற்கு பல உளவியல் மற்றும் சூழ்நிலை சார்ந்த காரணங்கள் உள்ளன. கூட்டுக்குடும்பத்தில் இருந்து விலகி தனிக்குடித்தனம் இருத்தல், ஒன்றிரண்டு பிள்ளைகள் மட்டுமே கொண்டிருத்தல், வேலைப்பளுவின் காரணமாக குழந்தைக்கு அதிக நேரம் அளிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு, என பல காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் இந்த காரணங்கள் எதுவும் பிள்ளைகளை சுயசார்பு என்பதே இல்லாமல், பொத்திப் பொத்தி வளர்ப்பதை நியாயப்படுத்த முடியாது என்பதே உண்மை.

குழந்தைகள் மீது கவனம் செலுத்துவது நிச்சயம் மிக அவசியமான ஒன்று. அதிலும் பிள்ளைகளிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் மிருகங்கள் மலிந்த இந்தச் சூழலில், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதே சமயம், தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, தன்மை, தகைமை, ‘நல்லது எது, கெட்டது எது’ என்று பகுத்துணரும் அறிவு, எது தனக்கு உகந்தது, எந்தத் துறையில் தனக்கு ஈடுபாடு உள்ளது என்பதை தன்னளவில் தானாகவே அறிந்து கொள்ளும் சுதந்திரமும் கிடைக்கும் பிள்ளைகள், வாழ்வில் சிறந்த நிலைகளை அடைகிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்வது அவசியம்.

தன்னம்பிக்கை உடைய பிள்ளைகள்

பொதுவாக பெற்றோர்களின் கண்ணுக்குள் வைத்து கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படும் பல பிள்ளைகளிடம் சுயசார்பு, தன்னம்பிக்கை, சுயசிந்தனை, யோசனைத்திறன், கற்பனைத்திறன் ஆகியவை மிகக்குறைவாகக் காணப்படுகிறது என்று அறியப்படுகிறது.

இத்துடன், இப்படிப்பட்ட பிள்ளைகளுள் சிலர் வீட்டு நிலைமை, நிதி நிலைமை பற்றிய புரிதலோ கவலையோ இல்லாதவர்களாக, பிடிவாதக்காரர்களாக, எந்தச் சுழலிலும் தனக்கு வேண்டியது கிடைத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணமுடையவர்களாக வளரும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.

குழந்தைகளுக்கு எல்லைகள் வகுத்து சுதந்திரமும் கொடுத்துப் பாருங்கள். உலகம் புரிந்தவர்களாக, தன்னம்பிக்கை உடையவர்களாக பிள்ளைகள் வளர்ந்து வருவதை கண்ணாரக் காண்பதே பெற்றோருக்கு மிகச் சிறந்த பேறாகும்.

பட ஆதாரம்: ‘அபியும் நானும்’ திரைப்படம்

About the Author

preethi shanbhag

I am a psychiatrist by profession, a mother twice over by choice, and a dreamer. I love reading, travelling,cooking(and hence, obviously eating..), nature, photography, sketching and occasionally the luxury of doing nothing at read more...

1 Posts | 2,148 Views
All Categories