இந்த உணர்வுக்கு பெயர் என்ன?

இளமையில் காரணம் சொல்ல முடியாமல் சில சமயம் எட்டிப் பார்த்து விடுகின்ற இந்த உணர்வுக்கு, உறவுக்கு பெயர் என்ன?

இளமையில், காரணம் சொல்ல முடியாமல் சில சமயம் எட்டிப் பார்த்து விடுகின்ற இந்த உணர்வுக்கு, உறவுக்கு பெயர் என்ன?

கல்லூரியிலிருந்து மாலை வீடு திரும்பியதும், டிபனுக்கு பதிலாக கேழ்வரகு மாவில் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி சர்க்கரை கலந்து மொட்டை மாடிக்கு போய் உட்கார்ந்து காத்தாட, சாவகாசமாக சாப்பிடுவது ஒரு தனி சுகம். 

அன்றும் அப்படித்தான் ஏதோ பாட்டு பாடியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஃப்ளாட்டில் யாரோ ஒரு குடும்பம் புதிதாகக் குடி வந்து இருந்தார்கள்.

நான் கவனித்த வரை,  வயதான தம்பதியர், ஒரு மகன் மருமகள் மற்றும் ஒரு மகளும் கண்ணுக்கு தெரிந்தனர். அந்தப் பெண் என்னை விட ஒரு மூன்று வயது பெரியவளாக இருக்கலாம் என்று தோன்றியது.

இப்படியே தினம் தினம் மொட்டைமாடி வரும்போதெல்லாம் புதுக் குடித்தனக்காரர்களை ஒரு இயல்பான ஆவலுடன் கவனிப்பதுமாக நாட்கள் கடந்தன.

கொஞ்சம் தான் வயது வித்தியாசம் என்பதால் அந்த வீட்டுப் பெண், நிஷா என்னுடன் தோழியானாள். அப்புறமென்ன, தினந்தினம் நான் என் வீட்டு மொட்டைமாடியில் இருந்தும், அவள் அவளுடைய வீட்டு பால்கனியிலிருந்தும் பேசிக்கொள்வோம். அப்போதெல்லாம் அவள் வீட்டில் புதிதாக ஒரு ஆண் குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவர் முகத்தைப் பார்க்கவில்லை.  

சில நாள் கழித்து நிஷா வீட்டில் ஏதோ பூஜை என்று வெற்றிலைப் பாக்கு வாங்கிக்கொள்ள அழைத்து இருந்தார்கள். நான் தம்பியை துணைக்கு கூட்டிப் போய் இருந்தேன்.  காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்த வேளையில், கதவைத் திறந்தது ஒரு புதுமுகம்.

முகம் முழுக்க புன்னகையுடன்,  துருதுருவென்ற கண்களுடன் “வாங்க வாங்க!  நிஷா சொன்னா, நீங்க வருவீங்கன்னு சொல்லி.  அம்மா… அவங்க வந்து இருக்காங்க, பாரு” என்றபடி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், அவர். பின்னர், “நிஷா, உன் ஃப்ரெண்டு  வந்தாச்சு!” என்று குரல் கொடுத்தபடி, ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம்.

மற்ற குடும்ப நபர்களை ஓரளவு பார்த்து இருந்தாலும், இந்தப் புதுமுகம் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் கூடியது. ஏதோ ஒரு புது உணர்வு எட்டிப்பார்த்தது.  

நான் சங்கோஜத்துடன் நெளிவது பார்த்து புரிந்து கொண்டு,  நிஷாவே சொன்னாள்.
“ஃபீல் ஃப்ரீ, இவன் என் ரெண்டாவது அண்ணா தான். பெயர், மோகன். இங்கேதான் ஒரு விளம்பரக் கம்பனியில் வேலை பார்க்கிறான்”, என்றாள்.
என்ன காரணத்திற்காகவோ, மனதில் ஒரு ஆனந்த கும்மி, “இனி நித்தம் பார்க்கலாம்” என்றது!

அடுத்து வந்த நாட்களில் மொட்டை மாடிக்குப் போகும் போதெல்லாம், கண்கள் நிஷாவை தவிர வேறு ஒரு முகத்தையும் தேடின. சில அதிர்ஷ்டவசமான நேரங்களில், குளித்தபின் ஈரத் துண்டைக் காயப் போடும் வகையில் பால்கனிக்கு அவரது வருகை.  என்னையும் பார்த்துவிட்டால்,  பல மாதங்கள் பழகியவர்கள் போல்,  “என்ன…காலேஜு க்கு கிளம்பலையா? இந்தக் காலை நேரத்தில் மொட்டை மாடி?” என்று கேட்பார்.

“பரிட்சை வருது… அதனால காலையில ஒரு மணி நேரம் படிக்கலாம் என்று வந்தேன்” என்பேன். 

இப்படியே சில நாட்கள் சென்றன. அன்று ஒரு வெள்ளிக்கிழமை. மாலையில் மொட்டைமாடி சந்திப்பில் நிஷா சொன்னாள்,  “இன்னிக்கு வந்திருக்கிற வாரப் பத்திரிக்கைல
அண்ணன் எழுதின கவிதை, ‘தமிழ்தாசன்’ அப்படிங்கற பேர்ல வெளியாகி இருக்கு தெரியுமா?” என்றாள்.

“இல்லை” என்று நான் அவசரமாக தலையாட்டவும், அவள் பால்கனியில் இருந்து புத்தகத்தை சுருட்டி என்னிடம் தூக்கி எறிந்தாள். “32வது பக்கத்தில் வந்து இருக்கு பாரு” என்றாள். படித்தேன். நன்றாகவே இருந்தது. அவள் அண்ணனும் பால்கனி வரவே, “வாழ்த்துக்கள், ரொம்ப நல்லா இருக்கு!” என்றேன்.

நான்கு பேர் புன்னகைக்கக் கூடிய அளவு புன்னகை, அவர் ஒரு முகத்தில் கொண்டு “தேங்க்ஸுங்க” என்றார்.

இப்படியே மாதங்கள் உருண்டன. கொஞ்சம் உரிமையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்று வரும் அளவுக்கு நட்பு வளர்ந்தது. 
அப்படி ஒரு நாள் சென்றிருந்தேன். அன்று நிஷா வீட்டில் எல்லோரும் பதற்றத்துடன் இருப்பதாகத் தோன்றியது.

“எந்த ஹாஸ்பிடல்? இப்ப எப்படி இருக்கு?” என்ற வசனங்கள் கொஞ்சம் கலக்கம் தந்தன. ‘உறவினர் யாருக்கும் உடல் நலமில்லையோ’ என நினைக்கத் தோன்றியது.

பின்னர் என்னுடைய வேலைகளில் நகர்ந்து விட்டேன். மனதில் ஒரு மூலை மட்டும், அவர்கள் வீட்டில் பதற்றத்தின் காரணம் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தது.

பின் தெரிய வந்தது; மோகனுக்கு தான் விபத்தாம். பாலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் இறங்கும்போது பின்னால் வந்த லாரி அடித்ததில் சீரியஸாக மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள். மறுநாள் பொழுது அஸ்தமிக்கும் வேளையில் அவன் வாழ்வும் அஸ்தமித்தது.

கல்லூரிப்பருவத்தில், மனதில் வந்த உணர்வு காதலா நட்பா என புரியாமல், கண்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தன.

பட ஆதாரம்: ‘3’ திரைப்படம்

About the Author

2 Posts | 4,119 Views
All Categories